மூடு

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம்:

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம், இந்திய அரசாங்கத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. குழந்தைகளின் பாதுகாப்பையும், பராமரிப்பையும் உறுதி செய்வதே திட்டத்தின் தலையாய நோக்கம். மத்திய அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை ஒவ்வொரு மாநிலமும் செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாநில அரசாங்கமும் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கத்தை நிறுவி, அதன் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திற்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகளை ஏற்படுத்தி குழந்தைகள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தமிழக அரசின் சமூகப்பாதுகாப்புத்துறை சென்னையை தலைமையிடமாக கொண்டு, மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தை அமைத்து, தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களிலும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகளை ஏற்படுத்தி, அதன் மூலம் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. ஒரு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் தலைமையில் 11 பணியாளர்களுடன் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தின் வழிகாட்டுதல் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நோக்கங்கள்:

 • நிறுவனம் சார்ந்த பராமரிப்பு, குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்த பராமரிப்பு, ஆற்றுப்படுத்துதல் மற்றும் மனவள ஆலோசனைகள் வழங்குதல், மாவட்ட அளவிலான சேவைகள் செய்தல்.
 • குழந்தைகள் தொடர்பாக சேவை அளிக்கும் நிறுவனங்கள், காவல்துறை, நீதித்துறை, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பிற தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல்.
 • குழந்தைகளின் பாதுகாப்பை திறம்பட நடைமுறைப்படுத்த, குழந்தை பின்தொடர் முறைமை மற்றும் மேலாண்மை தகவல் அமைப்பு ஆகிவற்றை நடைமுறைப்படுத்துதல்.
 • குழந்தை உரிமைகள் மற்றும் குழந்தை பாதுகாப்பு குறித்த பணிகளை அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்துதல்.
 • குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளின் உரிமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
 • குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்த குழந்தைகள் பாதுகாப்பை பலப்படுத்துதல்.

அமைப்பு விளக்கப்படம்:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் செயல்பாடுகள்:

ஓருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் செயல்பாடுகள் கீழ்கண்டவாறு:

 • குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தேசிய திட்டங்கள் மற்றும் குறிக்கோள்களை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களோடு இணைந்து நல்ல முறையில் செயல்படுத்துதல்.
 • குழந்தை இல்லங்களில் உள்ள அனைத்து குழந்தைகளையும் தனிநபர் பராமரிப்புத்திட்டத்தின் கீழ் பராமரித்தல்.
 • ஓருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்கள், குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள ஆகியவற்றோடு இணைந்து, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ள குடும்பங்களிலிருந்து, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் மறுவாழ்விற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
 • தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் குழந்தைகள் இல்லங்களை ஆய்வு செய்து குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்தல்.
 • நிறுவனம் சாரா பராமரிப்பின் கீழ் நிதி ஆதரவு மற்றும் தற்காலிக பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கண்டறிந்து உதவுதல்.
 • வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை உருவாக்கி குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்தல்.
 • குழந்தை பின்தொடர் முறையின் (ஊவுளு) மூலம் மாவட்டத்திலுள்ள அனைத்து குழந்தைகள் இல்லங்களிலுள்ள குழந்தைகளின் முழு விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல்.
 • குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், புறக்கணித்தல் மற்றும் சுரண்டல்களிலிருந்து குழந்தைகளை காத்து வளமை மிக்க பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்தல்.
 • குழந்தைகள் தொடர்பான சட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து கண்காணித்தல்.
 • ஆதரவற்ற குழந்தைகளின் பாதுகாப்பையும், பராமாப்பையும் உறுதி செய்வது.
 • தத்து வழங்கும் நிறுவனத்தை கண்காணித்தல்.
 • இளைஞர் நீதிக்குழுமம் மற்றும் குழந்தைகள் நலக்குழுவில் பணிகளில் உடனிருந்து உதவுதல்.
 • நிறுவனம் சார்ந்த பராமரிப்பு, குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்த பராமரிப்பு, ஆற்றுப்படுத்துதல் மற்றும் மனவள ஆலோசனைகள் வழங்குதல், மாவட்ட அளவிலான சேவைகள் செய்தல்.
 • மாவட்ட மற்றும் வட்டார அளவில் குழந்தைகளின் பாதுகாப்பில்
 • இளைஞர்களின் ஈடுபாட்டினை உறுதி செய்தல் மற்றும் ஊக்கப்படுத்துதல்.
 • அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டத்தினை நடத்தி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
 • மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், மாநில தத்தெடுப்பு வள மையம் மற்றும் பிற மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகங்களுடன் இணைந்து செயலாற்றுதல்.
 • மாவட்டத்தில் செயல்படும் அனைத்து குழந்தைகள் இல்லங்கள் தொடர்பான விபரங்களை சேகரித்தல் மற்றும் பராமரித்தல். தகவல் மேலாண்மை அமைப்பின் மூலம் அனைத்து விபரங்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்தல்.
 • இளைஞர் நீதிச் (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015ன் கீழ் இளைஞர் நீதிக்குழுமம், குழந்தைகள் நலக்குழு மற்றும் சிறப்பு சிறார் காவல் அலகு ஆகியவற்றுடன் இணைந்து குழந்தை இல்லங்களின் குறைந்தபட்ச தரங்களை உறுதி செய்தல்.
 • குழந்தை திருமண தடைச்சட்டம், குழந்தை தொழிலாளர் தடைச்சட்டம், கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிதல் தடைச்சட்டம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் போன்ற சட்டங்களை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

குழந்தை இல்லங்களை பதிவு செய்தல் மற்றும் கண்காணித்தல்:

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 25 குழந்தை இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. 24 குழந்தை இல்லங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கீழும், 1 அரசு குழந்தைகள் இல்லமும் செயல்பட்டு வருகின்றன. அனைத்து குழந்தை இல்லங்களும் இளைஞர் நீதிச்சட்டம் 2015 கீழ் பதிவு பெற்றுள்ளன.

திட்டங்கள்:

நிதிஆதரவு மற்றும் வளர்ப்பு பராமரிப்புத்திட்டம்:

குழந்தைகள் பெற்றோரின் பராமரிப்பில் வளர்வதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும். மேலும் இத்திட்டம்

 • குழந்தைகள் கைவிடப்படுவதை தடுத்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
 • குழந்தைகள் கல்வியைத் தொடர்வதை உறுதி செய்கிறது.
 • வளர்ப்பு பராமரிப்பு குழந்தைகளுக்கு தொடர்ந்து நிதி ஆதரவு வழங்குகிறது மற்றும் கண்காணிக்கிறது.
 • குடும்ப சூழலுடனான பராமரிப்பை குழந்தைகளுக்கு வழங்குகிறது.
 • குடும்பங்களை காத்தல் மற்றும் பெற்றோர் தங்கள் கடமையை செய்வதை ஊக்குவிக்கிறது.

தொடர்பு விபரங்கள்:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
எண்: 24 இரண்டாவது தளம்,
பிங்கர் போஸ்ட், உதகமண்டலம்,
நீலகிரி மாவட்டம் – 643006.
தொலைபேசி எண்: 0423 – 2445529
மின்னஞ்சல்: dcps[dot]nilgiris[at]gmail[dot]com

தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பு அலுவலர்:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
எண்: 24 இரண்டாவது தளம்,
பிங்கர் போஸ்ட்,
உதகமண்டலம் 643006.