மூடு

மீன்வளத்துறை

முன்னுரை

நீலகிரி மாவட்டம் பெரும்பாலும் மலைப்பாங்கான இடங்களை கொண்டு உள்ளதால் இம்மாவட்டம் ஐரோப்பிய நாடுகளை போன்று “குளிர்நீர்மீன்” வளத்திற்கு உகந்ததாக உள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் கடல் மட்டத்திற்கு மேல் சுமார் 2000 மீட்டர் முதல் 2660 மீட்டர் வரை உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு பெய்யும் ஆண்டு சராசரி மழை அளவு 125 செ.மீ ஆகவும், நிலவும் தட்பவெப்பநிலை 0 முதல் 26 டிகிரி வரை உள்ளது. மேலும் இம்மாவட்டத்திலுள்ள 12 நுண்புனல்மின்நிலையம் வாயிலாக ஏறத்தாழ 831.4 மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தில் உள்ள இயற்கை நீர்நிலைகளில் மின்னோஸ், டேனியோ மற்றும் புன்டியஸ் ரக மீன்கள் இருந்துள்ளது. ஐரோப்பியர்களின் வருகைக்கு பின்னர் அப்பொழுது இருந்த ஆங்கிலேய மாவட்ட ஆட்சியர்களால் பல்வேறு நிலைகளில் மீன்வளப்பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல்வேறு நாடுகளிலிருந்து கண்ணாடி கெண்டை, தோல் கெண்டை, செதில் கெண்டை, டின்கா மற்றும் டிரவுட் ஆகிய மீன்வகைகள் தூண்டில்(விளையாட்டு) மீன்பிடிப்பிற்கு எனக் கொணரப்பட்டு இருப்பு செய்யப்பட்டுள்ளது.

அவலாஞ்சி டிரவுட் மீன்குஞ்சு பொறிப்பகம் மற்றும் பண்ணை

1907 ஆம் ஆண்டு திரு. ஹென்றி சார்ல்டன் வில்சன் என்ற ஆங்கிலேய தொழிற்நுட்ப வல்லுநரால் தொடங்கப்பட்ட அவலாஞ்சி டிரவுட் மீன்குஞ்சு பொறிப்பகம் மற்றும் பண்ணை கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 2036 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. டிரவுட்  மீன்களிலிருந்து முட்டைகளை எடுப்பதற்கும் அம்முட்டைகளிலிருந்து குஞ்சுகளை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டிரவுட் மீங்களின் இனப்பெருக்க காலம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முடிவடையும். இச்சமயத்தில் பண்ணையில் வளர்க்கப்படும்  மீங்களின் முட்டைகள் செயற்கைமுறையில் கருவூட்டல் செய்யப்பட்டு அம்முட்டைகளை ஒடும்  குளிர்நீரில்  பொறிப்பகத்தில் சுமார் ஒரு மாத காலம் வரை வைக்கப்பட்டு மீன்குஞ்சுகள் பொறிக்கப்படுகின்றன. இம்மீன் குஞ்சுகளை பராமரிப்பதற்காக தற்பொழுது அவித்த முட்டையின் மஞ்சள் கரு மற்றும் 45 சதவீத புரதசத்து மிக்க செயற்கை தீவனம் உணவாக அளிக்கப்படுவதன் வாயிலாக நீர்மாசுபடுவது தவிர்க்கப்படுவதுடன் டிரவுட் மீன்குஞ்சுகளின் பிழைப்பு சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் அவலாஞ்சி பொறிப்பகத்திற்கு லக்கிடி, தேவர்பெட்டா, தலைகுந்தா, முக்குருத்தி ஆகிய இடங்களிலிருந்து கருவுற்ற டிரவுட் முட்டைகள் கொணரப்பட்டு மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மொத்தம் மூன்று மாதங்கள் வரை பண்ணையில் வளர்க்கப்பட்ட டிரவுட் விரலிகள் அவற்றிற்கென ஒதுக்கப்பட்ட பாதுகாப்பான நீர்நிலைகளில் பின்பு இருப்பு செய்யப்படுகின்றது.

டிரவுட் மீன்கள் இடும் முட்டை, கருமுட்டை, அல்வின், நுண்மீன்குஞ்சுகள் மற்றும் இளமீன்குஞ்சுகள் என பல்வேறு நிலைகளில் அதே இனத்தை சேர்ந்த இதர டிரவுட் மீன்கள் உணவாக உட்கொள்வதால் டிரவுட் மீன்கள் இயற்கையில் இனபெருக்கம் செய்திடும் போது அவற்றின் பிழைப்பு சதவீதம் மிகவும் குறைந்து காணப்படும். எனவே டிரவுட் மீன்கள் நீலகிரி மாவட்ட இயற்கை டிரவுட் நீர்நிலைகளில் அழிய கூடிய நிலையில் உள்ளதால் அவற்றை அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு டிரவுட் மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு விரலிகளாக வளர்த்தெடுக்கப்பட்டு டிரவுட் நீர் நிலைகளில் ஒவ்வொரு ஆண்டும் இருப்பு (சுயnஉhiபெ) செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் டிரவுட் மீன்கள் உத்தர்காண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாசல் பிரதேசம் ஆகிய மாநிலங்களை தவிர தென்னிந்தியாவில் தமிழகத்திலுள்ள நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே டிரவுட் மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2011-12 ஆம் ஆண்டில் தேசிய மீன்வள அபிவிருத்தி வாரிய நிதி ரூ.30,00,000/- ஒதுக்கீடு பெறப்பட்டு கடந்த மே 2015 உதகமண்டலம் பொதுப்பணித்துறையினரால் ரூ.29,14,560/- செலவில் டிரவுட் மீன்குஞ்சு பொறிப்பகம் புதுபிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் டிரவுட் விரலிகள் டிரவுட் நீர்நிலைகளில் இருப்பு செய்த விவரம் பின்வருமாறு

கடந்த 5 ஆண்டுகளில் டிரவுட் விரலிகள் டிரவுட் நீர்நிலைகளில் இருப்பு செய்த விவரம் பின்வருமாறு:
வ.எண் வருடம் கண் உருவான கருமுட்டை (எண்ணிக்கை) இருப்பு செய்த விரலிகள் (எண்ணிக்கை)
1 2013-2014 1,03,300 69,500
2 2014-2015 1,01,100 71,600
3 2015-2016 56,230 38,250
4 2016-2017 29,750 19,300
5 2017-2018 82,000 63,300

 

டிரவுட் நீர்நிலைகள்

  1. அப்பர் பவானி அணை (முழுக்கொள்ளவு 2276.88 மீட்டர்)
  2. அவலாஞ்சி அணை (முழுக்கொள்ளவு 1987.26 மீட்டர்)
  3. எமரால்டு அணை (முழுக்கொள்ளவு 1985.50 மீட்டர்)
  4. முக்குருத்தி அணை (முழுக்கொள்ளவு 2098.24 மீட்டர்)
  5. பார்சன்ஸ் வேலி அணை (முழுக்கொள்ளவு 2209.80 மீட்டர்)

கெண்டை நீர்நிலைகள்

1939 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கண்ணாடிக் கெண்டை, செதில் கெண்டை, தோல் கெண்டை ஆகிய மீன் இனங்கள் வரவழைக்கப்பட்டு நீலகிரியிலுள்ள நீர்நிலைகளில் விடப்பட்டன. தற்பொழுது அம்மீன் இனங்கள் நீலகிரி மாவட்டத்தில் முக்கிய மீன் ஆதாராமாக இருந்து வருவதால் அவை பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் துறையால் கெண்டை மீன்குஞ்சுகள் இருப்பு செய்வது மற்றும் மீன்பிடிப்பிற்கான இலக்கு நிர்ணயம் செய்யப்படுவதைத் தொடர்ந்து அதற்கான இலக்கு எய்தப்பட்டு வருகிறது. அவ்வாறு பிடிக்கப்படும் கெண்டை மீன்கள் அரசு நிர்ணயித்த விலையில் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

நீலகிரியிலுள்ள கெண்டை நீர்நிலைகள்

  1. உதகமண்டலம் ஏரி
  2. சாண்டிநல்லா அணைஷ
  3. டி.ஆர்.பஜார் அணை
  4. கிளன்மார்கன் அணை
  5. பைக்காரா அணை
  6. குந்தா அணை
  7. வெலிங்டன் ஏரி
  8. மசினக்குடி ஏரி
  9. மரவக்கண்டி அணை
  10. மாயார் அணை

உரிமங்கள்

மீன்வளத்துறையினரால் கெண்டைரக மீன்களுக்கு மட்டுமே தூண்டில் மூலம் மீன் பிடிப்பதற்கு தற்பொழுது உரிமங்கள் வழங்கப்படுகின்றன. உரிமங்கள் கீழ்க்கண்ட காலத்திற்கு ஏற்றவாறு கட்டணங்கள் வசூல் செய்யப்படுகிறது.

  1. வருட உரிமம் –                    ரூ.600/-
  2. ஆறு மாத உரிமம் –            ரூ.300/-
  3. மாத உரிமம் –                       ரூ.150/-
  4. வார உரிமம் –                       ரூ.75/-
  5. நாள் உரிமம் –                       ரூ.20/- (சாண்டிநல்லா நீர்த்தேக்கம் ரூ.15/-)

நீலகிரி மாவட்டத்தில் டிரவுட் மீன்கள் உள்ள அப்பர் பவானி, அவலாஞ்சி, முக்குருத்தி ஆகிய டிரவுட் நீர்நிலைகள் அனைத்தும் வனத் துறையினரால் ‘புலிகள் காப்பகம்” என வகைப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் டிரவுட் மீன்கள் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வலுவலகத்தின் வாயிலாக தூண்டில் மீன்பிடிப்பிற்கென அதற்கான உரிமங்கள் ஏதும் தற்பொழுது வழங்கப்படுவதில்லை.

தொடர்பு விபரங்கள்:-

மீன்துறை உதவி இயக்குநர்,

மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம்,

மத்திய பேருந்துநிலையம் அருகில்,

உதகமண்டலம் – 643001.

தொலைபேசி எண்:- 0423-2443946

மின்னஞ்சல்:- adfudagai[at]gmail[dot]com