மூடு

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை

நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி, கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர்களின் சந்திப்பில் அமைந்துள்ளது. இதன் மேற்கே கேரள மாநிலமும், வடக்கில் கர்நாடக மாநிலமும் கிழக்கிலும் தெற்கிலும் கோயமுத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களும் முறையே எல்லையாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மாவட்டமானது ஒரு பிரதான தோட்டக்கலை மாவட்டமாகும். பயிர்சாகுபடியிலும், சீதோசண நிலையிலும் அண்டைய மாவட்டங்களைக் காட்டிலும் பெருமளவு வேறுபட்டது. மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 2545 சதுர கிலோ மீட்டராகும் இம்மாவட்டத்தில் 6 வருவாய் வட்டங்கள் உள்ளன. மேலும் நீலகிரி மாவட்டத்தின் தனிச்சிறப்பு மொத்த பரப்பளவில் 56% காடுகளை கொண்டதாகும் கடல் மட்டத்திலிருந்து 900 – 2636 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் சராசரி மழையளவு ஆண்டொன்றிற்கு 1522.7 மில்லி மீட்டர் ஆகும்.

நீலகிரி மாவட்டம் புகழ் பெற்ற சர்வதேச கோடை வாசஸ்தலம் ஆகும். இங்குள்ள சுற்றுலா தலங்களின் அழகும் குளுமையும் சர்வதேச சுற்றுலா பயணிகளையும் கவர்வதாகவுள்ளது. ஆகையால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நிலவக்கூடிய தட்பவெட்பநிலை பல்வேறு பயிர்கள் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது, முறையே காய்கறிகள், பழங்கள், வாசனைதிரவிய பயிர்கள், மலர்கள், மருத்துவ பயிர்கள் மற்றும் மலைத் தோட்டப்பயிர்கள் ஆகியவை படிமட்டங்கள் (Terrace cultivation) மற்றும் சில கிரமங்களில் குறுகிய சரிவான பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றன.

மலையின் உயரமான பரப்பில் உருளைக்கிழங்கு, முட்டை கோஸ், கேரட், பீன்ஸ், பிளம், பீச், பேரி மற்றும் இதர வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மலையின் இடைப்பட்ட பகுதிகளில் கமலாஆரஞ்சு, காப்பி சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த உயரப்பகுதிகளில் கிராம்பு, ஜாதிக்காய், மிளகு, இஞ்சி மற்றும் துரியன், லிச்சி, ரம்பூட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

தோட்டக்கலை பயிரான காய்கறிகள் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டிற்கு மூன்று பருவங்களாக சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவையாவன

 • நீர்போகம் ((Irrigated Season)
 • கார்போகம் (Main Season)
 • கடைபோகம் (Autumn Season)

நீலகரி மாவட்டத்தில் 2019-2020 ஆம் ஆண்டு கணக்கின் படி 73406.00 ஹெக்டர் பரப்பளவில் 83,125 விவசாயிகள் வேளாண்மை மேற்கொண்டு வருகின்றனர்.

தோட்டக்கலை மற்றம் மலைப்பயிர்கள் துறை வாயிலாக நீலகிரி மாவட்ட விவசாயிகள் பயனடையும் பொருட்டு கீழ்க்கண்ட திட்டங்கள் செயல்ப்படுத்தப்பட்டு வருகிறது.

 1. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கம் (MIDH)
 2. பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம் (PMKSY)
 3. துணைநிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் (SWMA)
 4. புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டம் (RMFBY)
 5. கூட்டுப்பண்ணையத் திட்டம் (Collective Farming)
 6. சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டம் (SADP)
 7. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் (NADP)
 8. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் (IHDS)

1. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கம் (MIDH)

தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் ஒரு ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக இயக்கப்படுவதே ஓருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கம் (MIDH) ஆகும். இத்திட்டத்தின் கீழ் நடவுபொருட்கள் விநியோகம், நீர்த்தேக்க நிலைகள் உருவாக்குதல், பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர்வளர்ப்பு, தோட்டக்கலை பணிகளை இயந்திரமயமாக்குதல், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகளிடையே பரப்புதல், ஒருங்கிணைந்த அறுவடை பின் நேர்த்தி, மகரந்த சேர்க்கை ஊக்குவித்தல், சந்தை கட்டமைப்பு வசதிகள் மற்றும் விவசாயிகள் பயிற்சி போன்றவை விவசாயிகளுக்கு மானியத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் நீலகரி மாவட்டத்தை இயற்கை வேளாண் மாவட்டமாக மாற்ற, இயற்கை வேளாண் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக நிரந்தர மண்புழு உரக்கூடங்கள் நிர்மாணிக்கவும் மண்புழு படுகைகள் வாங்கவும் மானியம் வழங்கப்படுகின்றது.

2. பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம் (PMKSY)

“Per drop more crop” என்ற குறிக்கோளுடன் தண்ணீரை பயிர்களுக்கு தேவையான அளவில் தேவையான நேரத்தில் அளித்து பயிர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் சீரிய பாசன முறையான நுண்ணீர் பாசனத்திட்டம் விவசாயிகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் பயிர் செய்யப்படும் பயிர்களுக்கு தெளிப்பு நீர் பாசனம் மிகவும் உகந்ததாக இருப்பதால் காய்கறிப்பயிர்கள் மற்றும் தேயிலைப்பயிருக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் தெளிப்பு நீர் கருவிகள் மற்றும் குழாய்கள் வழங்கப்பட்டு நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது

3. துணைநிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் (SWMA)

துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் (SWMA) எனப்படும் இத்திட்டமானது பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இத்திட்டத்தில் கீழ்க்கண்டவாறு மானியங்கள் வழங்கப்படுகின்றது.

 • குழாய் கிணறு/துளைக்கிணறு – ரூ.25000 அலகு/நபர்
 • டீசல் பம்ப்செட்/மின் மோட்டார் பம்ப்செட் – ரூ.25000/- அலகு/நபர்
 • பாசனக்குழாய் – ரூ.10000/- நபர்
 • தரைநிலை நீர்த்தேக்கத்தொட்டி – ரூ.40000/- நபர்

4. புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டம் (RMFBY)

இயற்கை சீற்றங்களால் தோட்டக்கலைப் பயிர்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளை குறைப்பதற்காக இப்பயிர்காப்பீட்டுத் திட்டமானது செயல்ப்படுத்தப்பட்டு வருகின்றது.

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்களான உருளைக் கிழங்கு, முட்டைகோஸ், கேரட், பூண்டு, இஞ்சி, வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு பயிர்காப்பீடு செய்வதற்கு அறவிக்கை செய்யப்பட்டுள்ளது. கூடலூர் வட்டாரத்தில் மரவள்ளி, இஞ்சி மற்றும் வாழை பயிர்களுக்கும் உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி வட்டாரங்களில் உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கேரட், மற்றும் பூண்டு போன்ற பயிர்களுக்கும் பயிர்க்காப்பீடு அறிவிக்கப்பட்ட கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

5. கூட்டுப்பண்ணையத் திட்டம் (Collective Farming)

சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்களை ஒருங்கிணைந்து கூட்டுப்பண்ணைய முறையை ஊக்குவித்தல், ஒருங்கிணைந்த கடன் வசதி பெறுதல், ஓருங்கிணைந்த இடுபொருட்கள் வாங்குதல், சிறந்த தொழில்நுட்ப முறைகளை பின்பற்றுதல், முன் மற்றும் பின் சந்தை இணைப்பு தொடர்களை ஏற்படுத்துதல் போன்றவற்றை முறையாக பயன்படுத்தி பயன்பெற ஏதுவாக அமைக்கப் பெற்றதே கூட்டுப்பண்ணையம் திட்டமாகும். நீலகிரி மாவட்டத்தில் 340 விவசாய ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவை ஒருங்கிணைக்கப்பட்டு 68 உழவர் உற்பத்தியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரிடமிருந்து திட்டச்செயலாக்கம் ஒப்புதல் பெறப்பட்டு ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கும் ரூ.5.00 இலட்சம் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 48 உழவர் உற்பத்தியாளர் குழுக்களையும் ஒருங்கிணைத்து 3 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களாக வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வசம் மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

6. சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம் (SADP)

இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் தேயிலை நாற்றுகள் வழங்கப்படுகின்றது.

7. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் (NADP)

இத்திட்டத்தின் கீழ் இயற்கை முறையை பின்பற்றும் விவசாயிகளுக்கு மானியங்களும் உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றது. இம்மாவட்டத்தில் கீரைகள், முட்டைகோஸ், பூ கோஸ், பீன்ஸ் மற்றும் மேரக்காய் ஆகியவற்றை இயற்கை முறையில் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. மேலும் இயற்கை வேளாண் சான்றிதழ் பெற விண்ணப்பித்திருக்கும் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

8. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் (IHDS)

மாவட்டத்தில் பழம் மற்றும் பாரம்பரிய காய்கறி பரப்பினை அதிகரிக்க தோட்டக்கலைத் துறை இத்திட்டத்தை செயல்ப்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் எலுமிச்சை, தாட்பூட்பழம், பாரம்பரிய பீன்ஸ், மேரக்காய் ஆகியவற்றின் நடவுப்பொருட்கள், இடுபொருட்கள் ஆகியவற்றை விவசாயிகள் மானியத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.